சுய அறிவு
- கலீல் கிப்ரான்
சுய அறிவைப் பற்றி எங்களுக்கு சொல்லுங்கள் என்று ஒருவர் கேட்டார். அதற்கான பதில் இப்படி வந்தது.
ஆழ்ந்த அமைதியில் இருக்கும் உங்கள் இதயத்திற்கு பகலிரவின் ரகசியங்கள் தெரியும். ஆனால் அந்த உண்மையின் குரலைக் கேட்பதற்கு உங்கள் காதுகள் ஏங்குகின்றன.
எண்ணங்களால் எப்போதும் தெரிந்ததை நீங்கள் வார்த்தைகளாலும் அறிவீர்கள். உங்கள் கனவின் மெய்யை உங்கள் விரல்கள் தீண்ட முடியும். தீண்டவும் வேண்டும்.
மறைந்திருக்கும் உங்கள் ஆத்மாவின் நீரூற்று, எழும்பி கடலினை நோக்கிப் பாய வேண்டும். அப்போது உங்களுடைய ஆழத்தின் புதையல்கள் திறந்து காண்பிக்கப் படும். ஆனால் இவற்றை எடை போட தராசு ஒன்று தயார் செய்ய வேண்டாம்.
அறிவி்ன் ஆழத்தை கோல் கொண்டும், மிடுக்கான வார்த்தைகள் கொண்டும் தேட வேண்டாம். ஏனெனில், சுயம் என்னும் கடலிற்கு கரைகளும் இல்லை, அளவும் இல்லை...
நான் உண்மையை கண்டு பிடித்து விட்டேன் என்று சொல்வதை விட நான் ஒரு உண்மையை கண்டேன் என்று சொல்வது நல்லது. நான் ஆத்மாவின் பாதையை கண்டு பிடித்து விட்டேன் என்று சொல்வதை விட ஆத்மாவை என் பாதையில் கண்டேன் என்று சொல்லலாம்.ஏனென்றால் ஆத்மா எல்லா பாதைகளின் மீதும் பயணிக்கிறது.
அது நடக்கும் பாதை ஒரு நேர்க் கோடு இல்லை அது ஒரு நாணலைப் போல வளர்வதும் இல்லை.. ஆத்மாவின் விரிதலானது, எண்ணில்லா இதழ்கள் கொண்ட ஒரு தாமரை மொட்டின் அவிழ்தல் போன்றது.
கேள்வி
உங்கள் சுய அறிவு என்று நீங்கள் எதைக் கூறுவீர்கள்?