நமக்கு நாம் ஒளி விளக்காக இருத்தல்
- .J. கிருஷ்ணமூர்த்தி
விழிப்புணர்வுடன் இருப்பது என்பதன் அர்த்தம் நாம் நடப்பது, நாம் அமர்வது, நம் வார்த்தைகள், நம் எண்ணங்கள், நம் உணர்வுகள், நம் மனதில் தோன்றும் எதிர் செயல்கள் இவை அனைத்தையும் நாம் கவனித்து நோக்குதல் ஆகும்.
இந்த விழிப்புணர்வு என்பது தன்னுணர்வு இல்லாத மனம் மற்றும் அறிவு சார்ந்த மனம், அந்த மனதில் தேங்கி இருக்கும் துயரங்கள், மனித இனத்தின் மொத்த துயரங்கள் இவை அனைத்தயும் உள்ளடக்கியது. ஒவ்வொன்றையும் நல்லது, கெட்டது என்று நாம் மதிப்பீடு செய்வோமானால் நாம் விழிப்புணர்வுடன் இருக்க முடியாது.
விழிப்புணர்விலிருந்து சிரத்தையும் கவனமும் பிறக்கின்றன. நம்முடைய விருப்பு வெறுப்புகளும், தேர்வும், இல்லாத விழிப்புணர்வில் வெறும் கவனித்தல் மட்டுமே இருக்கிறது. இதற்கு மனதளவில் நிறைய இடம் தேவைப் படுகிறது, நம் மனதில் ஆசைகளும், அபிலாஷைகளும், துயரமும், வலியும் நிரம்பி இருக்கும் பொழுது உற்று நோக்குவதற்கோ, கவனிப்பதற்கோ தேவையான இடம் கிடைப்பதில்லை.
இந்த நிலையில் மனம் தன்னுடைய செயல்கள் மற்றும் எதிர் செயல்களிலே மாட்டிக் கொண்டும், சுழன்றுக் கொண்டும் இருக்கிறது. நம் மனதின் ஒவ்வோரு மூலையையும் நம்மால் ஆராய முடிய வேண்டும். ஒரு சிறிய இடத்தில் கூட இருட்டை ஆராய நாம் பயப்பட்டோம் என்றால் அதில் இருந்து மாயையும் மருட்சியும் பிறக்கும்.
ஆழ்ந்த கவனம் இருக்கும் நிலையில் மட்டும்தான் நாம் நமக்கே விளக்காக இருக்க முடியும். தினசரி வாழ்வின் ஒவ்வொரு செயலும் அந்த ஒளியிலிருந்து வரும் பொழுது - அது சமையல் செய்வதாக இருந்தாலும், பணியை செய்வதாக இருந்தாலும், அது தியானமாக இருக்கும்.
கரு: தினசரி வாழ்வின் ஒரு வேலை தியானமாக இருந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளூங்கள்.
Add Your Reflection
6 Past Reflections